மாநாட்டு பதாகைகள் மற்றும் கட்-அவுட்களில் விஜய் இந்த இரண்டு தலைவர்களுடன் இணைந்து இடம்பெற்றுள்ளார். அதில் “1967 மற்றும் 1977-ன் வரலாற்று வெற்றிகள் 2026-ல் மீண்டும் வரும்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு தலைவர்களின் வாரிசாக விஜய்யை நிலைநிறுத்தும் தெளிவான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
மாநாடு பிற்பகல் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி இரவு 7 மணிக்கு முடிவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கட்சி கொடியேற்றுதல், தீர்மானங்கள் நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஆனால் எல்லாவற்றையும் விட விஜய் பேசப் போகும் பேச்சுதான் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து விஜய் நிச்சயம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயணம் குறித்தும் இதில் விஜய் பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மாநாட்டு வளாகத்தில் மிகப் பெரிய அளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 70க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் மற்றும் 200 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி இடங்கள், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை 500 பெண் தொண்டர்கள் நிர்வகிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் இரண்டு மருத்துவ முகாம்கள், அவசர மருத்துவ உதவி, மற்றும் உதவிகளுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மாநாட்டு வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ தேவை ஏற்பட்டால் இவர்கள் உதவுவார்கள். அதேபோல ஆம்புலன்ஸ்களுக்காக தனிப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் மாநாட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதைப் போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, விஜய் நடந்து செல்ல 12 அடி உயர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய 3,000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாடு நடைபெறுவதால், பாரபத்தி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்களை இன்று மூட உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிர்வகிக்க போக்குவரத்து திசை திருப்பப்பட்டுள்ளது.
முன்னதாக விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், கர்ப்பிணிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மாநாட்டை நேரடி ஒளிபரப்பு மூலம் வீட்டிலிருந்து பார்க்குமாறு விஜய் கேட்டுக் கொண்டார்.
மாநாடு மாலையில் தொடங்கினாலும் கூட நேற்று முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்து விட்டனர். இதனால் மதுரை முழுவதும் தவெகவினரின் தலைகளாகவே உள்ளது. காலையிலிருந்தே மாநாட்டு வளாகத்தை தொண்டர்கள் நிரப்ப ஆரம்பித்து விட்டனர். காலை 9 மணிக்கெல்லாம் முக்கால்வாசி அரங்கம் நிரம்பி விட்டது. இன்னும் சற்று நேரத்தில் மொத்த திடலும் நிரம்பி விடும் என்று தெரிகிறது. இனிமேல் வருவோர் நிற்கும் நிலைதான் காணப்படுகிறது.