இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பிரிட்டன், குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணிக்கும் ஏஐ டூலை உருவாக்கி வருகிறது.
இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால் குற்றங்கள் நடக்கும் முன்பே அதைச் சரியாகக் கணித்துத் தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது நமது அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறி வருகிறது. ஜாலியாக பேசுவது முதல் கார்ப்பரேட் ஆபீஸ்கள் வரை, எல்லாப் பக்கமும் ஏஐ நமக்கு உதவியாக வருகிறது. இது மருத்துவ ஆராய்ச்சி முதல் போக்குவரத்து அமைப்புகளை ஒழுங்குபடுத்துவது வரை மிகப் பெரிய மாற்றங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது.
இதற்கிடையே பிரிட்டன் அரசு இதை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. அதாவது குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடக்கும் முன்னரே கணிக்கவும் உதவும் வகையில், ஏஐ அடிப்படையிலான குற்றத் தடுப்பு அமைப்பை உருவாக்கப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் விரிவான, ரியல் டைம் க்ரைம் வரைபடத்தை உருவாக்கும். குற்றங்கள் எங்கு நிகழ வாய்ப்புள்ளது என்பதை இந்த ஏஐ அமைப்பு துல்லியமாகக் கணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறு சம்பவங்கள் பெரிய குற்றமாக மாறுவதற்கு முன், அதிகாரிகள் தலையிட உதவும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் மேப்பிங் முறைகளை ஒருங்கிணைத்து இந்த முறை செயல்படும். போலீஸ் பதிவுகள், உள்ளூர் கவுன்சில்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் இருந்து டேட்டாவை எடுத்து அதை வைத்து இந்த ஏஐ மேப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் குற்றங்கள் எங்கே எப்போது நடந்தது என்பதை வைத்தும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்வோரின் நடத்தையைக் கண்காணித்தும் இந்த லிஸ்ட்டை உருவாக்கப் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கத்தி உட்பட வன்முறை தாக்குதல்கள், திருட்டு மற்றும் சமூக விரோத நடத்தை போன்ற குற்றங்களை முன்கூட்டியே கண்டறியும்.
இந்தத் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்தத் திட்டத்திற்கு 4 மில்லியன் பவுண்ட்டை பிரிட்டன் அரசு முதலீடு செய்துள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் வல்லுநர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மாடல்களை ஏப்ரல் 2026க்குள் உருவாக்குவதே இவர்களின் இலக்காக இருக்கிறது.
இது குறித்து பிரிட்டன் போலீஸ் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் கூறுகையில், “இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றங்களைத் தடுக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட உதவும் AI டூலை உருவாக்க நாங்கள் முதலீடு செய்கிறோம்” என்றார். இதற்கு முன்பும் பிரிட்டனில் க்ரைம் மேப்கள் இருந்துள்ளன. ஆனால், அந்த மேப்களில் குற்ற சம்பவங்கள் நடந்த பிறகு அது மேப்பில் வரும். ஆனால், இந்த ஏஐ டூல் குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணித்து மேப்பில் காட்டுமாம்.