கேரளாவின் பிரபலமான ராப் பாடகரான வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளி, ஏற்கனவே ஒரு பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த நிலையில், தற்போது மேலும் இரு பெண்கள் நேரடியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் பாலியல் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான ஹிரன்தாஸ் முரளி, அடக்குமுறைகளுக்கு எதிரான பாடல்களின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்டுள்ளார். சமீபத்தில் புலி பல் வைத்திருந்த சர்ச்சையிலும் இவர் சிக்கியிருந்தார். சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான குரலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு கலைஞரின் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில், ஒரு பெண் டாக்டர், வேடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 2021 முதல் 2023 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பணமோசடி செய்ததாகவும் கூறி புகார் அளித்தார். இந்த வழக்கில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில், மேலும் இரு பெண்கள் புதிய புகார்களை அளித்துள்ளனர். இந்த இரண்டு பெண்களும் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபியிடம் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் இன்று டிஜிபிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசை ஆராய்ச்சி தொடர்பாக கொச்சிக்கு வருமாறு தன்னை அழைத்த வேடன், அங்கு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண்ணும் மற்றொரு பெண், வேடனின் இசையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகியதாகவும், ஆனால் அவர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், பெண் டாக்டர் அளித்த பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி வேடன் தாக்கல் செய்துள்ள மனு இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அடுத்தடுத்து வெளிவரும் புகார்களால், இந்த வழக்கு கேரளாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில் வேடனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வலுத்து வருகின்றன. கேரள காவல்துறை இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்