டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்ய செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
அப்போது மசோதாக்களில் முடிவெடுப்பது என்பது ஆளுநரின் சிறப்புரிமை என்றும் அதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது அரசியலமைப்பு சீர்குலைவுக்கே வித்திடம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்திருந்தது. ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு வந்தது. இது மிக மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது.
இதற்கிடையே மசோதாக்களில் முடிவெடுக்கும் விவகாரத்தில் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்பது குறித்து குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து 14 கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தனது எழுப்பூர்வ வாதத்தைத் தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்பு மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பிரிவினையை இது பாதிக்கும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது என்பது ஒரு உயர்ந்த சிறப்புரிமை என்றும் இது நீதிமன்றத்தால் மறுஆய்வு செய்ய முடியாத அதிகாரம் என்றும் மத்திய அரசின் மனுவில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும், “ஒரு ஜனநாயகத்தில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதித்துறை வசம் தீர்வுகள் இல்லை. ஒரு அமைப்பின் அதிகாரத்தை மற்றொரு அமைப்பு தனதாக்கிக் கொள்ள அனுமதித்தால், அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும்.
அதிகார பகிர்வு அரசியலமைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், காலப்போக்கில், அவை ஒரு குறிப்பிட்ட அளவு ஒன்றிணைப்பு, சரிபார்ப்பு மற்றும் சமநிலை ஏற்பட்டது. இருப்பினும், மூன்று அமைப்புகளுக்கும் சில குறிப்பிட்ட அதிகாரங்கள் பிரத்தியேகமாகவே உள்ளன. அவற்றை மற்ற அமைப்புகள் மீற முடியாது. ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் உயர்ந்த, முழுமையான பதவிகள் இந்த பிரத்தியேக அதிகார வரம்பிற்குள் வருகின்றன. இவை அரசியல் பதவிகளாக இருந்தாலும், ஜனநாயகத்தின் பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளன.
ஆளுநர்கள் அமைச்சரவையால் (குடியரசுத் தலைவர் வழியாக) நியமிக்கப்பட்டாலும், நேரடித் தேர்தல்கள் மட்டுமே ஜனநாயகத்தில் உள்ள ஒரே ஜனநாயக செயல்முறை அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நியமிக்கப்படும் அதிகாரப் பதவிகளும் ஜனநாயக நம்பிக்கையின் சட்டபூர்வ மையங்களாகும்” என்று மேத்தா விளக்கினார். அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் ஜனநாய செயல்முறையின் ஒரு அங்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அரசு மேலும், “ஆளுநர்களை அந்நியர்களாகக் கருதப்படக்கூடாது. ஆளுநர்கள் மத்திய அரசின் தூதர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிநிதிகள். அவர்கள் இந்திய அரசியலமைப்பு சகோதரத்துவத்தின் ஒரு பகுதியாக மாநிலங்களில் தேசிய நலன் மற்றும் தேசிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது என்பது ஆளுநரின் ஒப்புதல் ஒரு உயர்ந்த சிறப்புரிமை. இது நீதிமன்றத்தால் மறுஆய்வு செய்ய முடியாத அதிகாரம், இது தனித்துவமானது.
ஆளுநர் அளிக்கும் இந்த ஒப்புதலின் இந்த நடவடிக்கைக்கு ஒரு அரசியலமைப்புத் தன்மை உள்ளது. இகு நீதித்துறை நிர்வகிக்கக்கூடியது இல்லை. நீதித்துறை மறுஆய்வின் எல்லைகள் விரிவடைந்து வந்தாலும், ஒப்புதல் போன்ற சில பகுதிகள் நீதிமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை. இது மாநில அமைப்புகளுக்கு இடையிலான அரசியலமைப்பு சமநிலையைச் சீர்குலைக்கும்.
இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. ஒரு ஜனநாயக அமைப்பில் எழும் ஒவ்வொரு குழப்பத்திற்கும் நீதித்துறை வசம் தீர்வுகள் இல்லை. எனவே அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் சில கேள்விகளை நீதித்துறை வரம்பிற்கு வெளியே வைத்தனர். உலகெங்கிலும் உள்ள நீதித்துறை நடைமுறைகளிலும் அதுதான் பின்பற்றப்படுகிறது. இதனால் நீதிமன்றம் காலக்கெடு விதிக்கும் உத்தரவைப் பிறப்பிக்க முடியாது.