2019 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக – பாமக கூட்டணி அமைத்தன. கூட்டணி ஒப்பந்தத்தில் பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என கையெழுத்தானது.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக ஆதரவுடன் பாமக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்பட ஆறு எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவுபெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
சட்டமன்றத்தில் பலத்தின் அடிப்படையில் திமுக கூட்டணியில் இருந்து நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அதே சமயம் அதிமுக கூட்டணியில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதிமுகவுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவின் நான்கு உறுப்பினர்கள் ஆதரவும் அதிமுகவுக்கு கிடைக்கும். இரண்டு இடங்களில் ஒரு இடத்தை அன்புமணிக்கு மீண்டும் அதிமுக விட்டுத் தருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனெனில் திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்க அதிமுக – பாஜக முயற்சி செய்து வருகிறது. கூட்டணிக்குள் பாமக, தேமுதிகவைக் கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. திமுகவை கடுமையாக விமர்சிக்கும் அன்புமணி ராமதாஸும், அதிமுக – பாஜக கூட்டணி என்கிற மனநிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்புமணிக்கு ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளன.
ஆனால், அன்புமணிக்கு வழங்கினால் அது அதிமுகவுக்குள் எதிர்ப்பை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் ஒரு பக்கம் பேச்சு நடத்திக்கொண்டிருந்த போதே மறுபக்கம், பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது. இதனால் பாமகவை நம்ப அதிமுக தயாராக இல்லை.அதனால் இரு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடும் மன நிலையிலேயே உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிமுகவுக்கு மக்களவையில் உறுப்பினர்களே இல்லை.
மாநிலங்களவை பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. ஆகவே, பாஜக ஆதரவுடன் இரண்டு இடங்களையும் அதிமுக தக்கவைத்து ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதிமுக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுகவிடம் பாமக மூவ் எதையும் செய்யவில்லை. மாநிலங்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் , அதற்கு அதிமுக – பாமக இடையே ஒரு உடன்பாடு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை அப்படி சீட் கேட்டு அனுகினால் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அதுகுறித்து முடிவு செய்யலாம் என்ற பதிலை சொல்லிவிடலாம் என்பதே அதிமுக தரப்பின் முடிவாக இருக்கும் என்கிறார்கள் அக்கட்சியினர். ஆக, அன்புமணி ராமதாஸ் மீண்டும் மாநிலங்களவை உறுப்பிராவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாகக் கூறுகிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.