ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் இன்று (அக்.1) நடைபெறுகிறது. தேர்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் தேர்தல் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த 18-ம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் (24 தொகுதிகள்) 61.38%, கடந்த 25-ம் தேதி நடைபெற்ற 2ம் கட்டத் தேர்தலில் (26 தொகுதிகள்) 57.31% வாக்குகளும் பதிவாகின. தொடர்ந்து, 3வது மற்றும் இறுதிக் கட்டமாக ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு, உத்தம்பூர், சம்பா, கதுவா உள்ளிட்ட பகுதிகளிலும் வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா ஆகிய பகுதிகளிலும் இன்று (அக். 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
40 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் முன்னாள் துணை முதலமைச்சர்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபர் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 40 தொகுதிகளிலும் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு கட்டத் தேர்தல்களும் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் மூன்றாம் கட்டத் தேர்தலையும் அமைதியான முறையில் நடத்தி முடிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் ஜெயின் தெரிவித்தார். இந்த தோ்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன.
முன்னதாக, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply