நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளம்.குளங்கள் நிரம்புகிறது.

கோவை மே 27 கோவையில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையை தாண்டி மழை நீர் பாய்ந்து ஓடியது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர் .நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து , பேரூர் படித்துறையை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் படித்துறையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தை பார்த்து ரசித்தனர். நொய்யல் ஆற்றில் வரும் நீர் கோவையில் உள்ள வேடப்பட்டி, புதுக்குளம் செங்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் நொய்யல் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ள பெருக்கு காரணமாக பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ அல்லது துணி துவைக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் புட்டு விக்கி, குனியமுத்தூர் ஆகிய தடுப்பணைகள் மழையால் நிரம்பி வழிகிறது. கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையான சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் கடந்து சில நாட்களுக்காக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று அணை நீர் பிடிப்பு பகுதியில் 85 மில்லி மீட்டர் மழையும் அடிவாரத்தில் 73 மில்லி மீட்டர் மழை பெய்தது இந்த அதிக மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடியில் இருந்து 22 அடியாக உயர்ந்தது.நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் குடிநீருக்கு எடுக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.