இனி சாதி பெயர் கூடாது… சிறை விதிகளில் திருத்தம்- தமிழக அரசு வெளியிட்ட அரசாணை.!!

சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி குறித்த தகவல்களை கேட்க கூடாது எனவும், சாதி குறித்த தகவல்கள் எவ்வித ஆவணங்களிலும் இருக்கக் கூடாது என அரசாணை வெளியீடு.

கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணிகளை வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; சிறைகளில் புதிய கைதியை அடைக்கும் போது, அவர்களின் ஜாதி தொடர்பான எந்த விபரங்களையும், சிறை அதிகாரிகள் விசாரிக்கவோ, பெறவோ, பதிவு செய்யவோ கூடாது. கைதிகளின் ஜாதி குறித்த விபரங்கள், பதிவேட்டில் பராமரிக்கப்படக் கூடாது. கைதிகள் அவர்களின் ஜாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை, சிறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

சிறைகளில் எந்த வேலையையும், கைதிகளின் ஜாதி அடிப்படையில் ஒதுக்கக்கூடாது. சிறைகளில் உள்ள, கழிவுநீர் தொட்டியை, ஆட்கள் வைத்து கைகளால் சுத்தம் செய்யக் கூடாது. இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். தமிழக சிறைத்துறை விதிமுறை திருத்தங்களை உடனடியாக அமல்படுத்தும் படி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.