இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் – தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வாஷிங்டன் பயணம்.!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‍அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 26% வரியை விதித்தார். இதனைத் தொடர்ந்து திடீரென மனசு மாறிய டிரம்ப், ஏப்ரல் 10 ஆம் தேதி, ஜூலை 9 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த 90 நாட்களுக்கு இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

இதன்பிறகு பேசிய டிரம்ப், வரி விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் விவாதங்கள் நேர்மறையாக முன்னேறி வருவதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ”இந்தியாவுடனான வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருகின்றன, மேலும் எதிர்காலத்தில் நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவோம் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். மேலும் இந்த செயல்முறை இறுதியானது அல்ல என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் தலையீட்டின்பேரில் பின்பு நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக பேசிய டிரம்ப், ”மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என இந்தியாவிடமும், பாகிஸ்தானிடமும் சொன்னோன். மோதலை நிறுத்தி விட்டார்கள்” என்றார். இது இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. ஆனால் மத்திய அரசு வட்டாரங்கள் மோதலை நிறுத்த எந்த வர்த்தக பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்தன.

இந்நிலையில், ஜூலை மாத தொடக்கத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தி வருகின்றன.

இரு தரப்பினரும் ஜூலை மாத தொடக்கத்தில் ஒப்பந்தத்தை முடிக்க இலக்கு வைத்துள்ளனர். பேச்சுவார்த்தைகளை வழிநடத்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் வாரங்களில் வாஷிங்டனுக்கு பயணம் செய்யும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.