திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிரபலமான ஜி பி முத்து. இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர் ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று மேற்படி கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது தெரியாமல் காணாமல் போய் விட்டது. அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது. இதனை கண்டுபிடித்து தரும் படி கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் ஜிபி முத்து தங்களது ஊர் மக்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதனால் பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் பலரும் இன்று ஜிபி முத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு முற்றுகையிடுவதாக தெரிவித்திருந்த நிலையில், பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஜி பி முத்துவின் வீட்டின் முன்பு திரண்டனர். அப்பொழுது கோவில் பணிகளை தொடங்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் கோவில் பணிகளை தொடங்கக்கூடாது என்று ஜிபி முத்து தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே போலீசாரும் இதில் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் இரு தரப்பினரிடையே கடும் வாக்கு வாதமானது நிலவி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து டிக் டாக் பிரபலமும் நடிகருமான ஜி பி முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, தங்கள் கிராமத்தில் உள்ள ஊர் மக்கள் திசைத்திருப்பதற்காகவே கோயில் தொடர்பான பிரச்சனையை தன் மீது திருப்புவதாகவும், கீழ தெரு காணாமல் போனதற்கான உரிய சான்று ஆவணங்கள் தன்னிடம் இருக்கிறது என்றும், இது தொடர்பாக தான் ஐகோர்ட்டில் பதிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் தானும் தன் குடும்பத்தினரும் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.