யுபிஎஸ்சி புதிய தலைவராக அஜய் குமார் நியமனம்..!

டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாக யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அந்த இடத்திற்கு அஜய் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் குரூப் 1 மற்றும் குரூப் 2 உள்ளிட்ட பிற தேர்வுகளையும் யுபிஎஸ்சி மேற்கொண்டு வருகிறது. இந்த யுபிஎஸ்சி தேர்வாணையத்திற்கு ஒரு தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள் இருப்பர்.

யுபிஎஸ்சி ஆணையத்திற்கு 2017ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த மனோஜ் சோனி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சோனி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் 2023ஆம் ஆண்டு சொந்த காரணங்களுக்கான திடீரென பதவியை ராஜினாமா செய்து விலகி கொண்டார்.

மனோஜ் சோனி 2029ஆம் ஆண்டு வரை யுபிஎஸ்சி தலைவராக நீடிக்க வாய்ப்பு இருந்த சூழலில், அவரின் ராஜினாமா பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. இவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, மகாராஷ்டிரா பயிற்சி ஐஏஎஸ்-ஆக இருந்த பூஜா கேத்கரின் விவகாரம் எழுந்து மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதன்பின் யுபிஎஸ்சி தலைவராக 2024 ஜூலை மாதம் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டார்.

இவரின் பதவிக்காலம் ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது யுபிஎஸ்சி புதிய தலைவராக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இவர் 2019 ஆகஸ்ட் முதல் 2022 அக்டோபர் மாதம் வரை பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்து வந்துள்ளார்.

1983ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியான அஜய் குமார், கேரளா மாநிலத்தில் ஐடி மற்றும் மாநில மின்னணு மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட துறைகளின் செயலாளராகவும் இருந்தவர். தற்போது யுபிஎஸ்சி தலைவராஜ அஜய் குமார் பதவிக் காலம், அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.