சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். துருக்கி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. துருக்கியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல் சம்பவத்திற்கு பிறகு துருக்கியில் இருந்து வரும் ஆப்பிளை மும்பை, புனே வியாபாரிகள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆப்பிள் வாங்கும் பொதுமக்களும் துருக்கி ஆப்பிளை வாங்காமல் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் புனே பழ மார்க்கெட்களில் துருக்கி ஆப்பிள் மாயமாகி இருக்கிறது. எனவே ஆப்பிள் விலையும் கிலோவிற்கு 20 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது. 10 கிலோ பாக்ஸ் விலை 200 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.
புனே வியாபாரிஇது குறித்து புனே ஆப்பிள் மார்க்கெட்டில் ஆப்பிள் வியாபாரம் செய்யும் சுயோக் என்பவர் கூறுகையில்,“பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு கொடுத்திருப்பதால் துருக்கியில் இருந்து ஆப்பிள் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். இப்போது ஹிமாச்சல பிரதேசம், ஈரான், வாஷிங்டன், நியுசிலாந்து உட்பட பிற பகுதியில் இருந்து ஆப்பிள் வாங்குகிறோம். இது வர்த்தகம் மட்டுமல்ல. தேசபக்தி சார்ந்தது. துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்தியா முதல் ஆளாக உதவி செய்தது. ஆனால் இப்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு உதவுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதே போன்று மும்பை ஆப்பிள் வியாபாரிகளும் துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்வதில்லை என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புனே வியாபாரிகள் 1000 முதல் 1200 கோடி ரூபாய் அளவுக்கு துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதி செய்வார்கள். தற்போது துருக்கிக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர ராஜஸ்தான் வியாபாரிகள் துருக்கியில் இருந்து மார்பிள்ஸ் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றனர். அவர்களும் துருக்கியில் இருந்து மார்பிள்ஸ் இறக்குமதி செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளனர். உதய்பூரை சேர்ந்த வியாபாரிகள் 70 சதவீதம் மார்பிளை துருக்கியில் இருந்துதான் இறக்குமதி செய்கின்றனர். இப்போது அனைத்து வியாபாரிகளும் சேர்ந்து துருக்கி மார்பிளை இறக்குமதி செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளனர். இதனால் துருக்கிக்கு 2500 முதல் 3000 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.