பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – பட்டாசு வெடித்து வரவேற்ற திமுகவினர்.!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை வரவேற்கும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கினை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், இன்று (மே.12) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சியாமளா, திமுக கழக சட்ட திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், திமுக நிர்வாகி தர்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.