எந்த காரணத்துக்காகவும் பொதுமக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கொடூர சம்பவத்துக்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறது, இதனால் கலக்கமடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு கோரியது.
இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று கூடியது. முன்னதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது. எந்த காரணத்துக்காகவும் பொதுமக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீண்டகாலமாக உள்ளன. சமீபத்திய பிரச்சினையால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு ஏற்படாது. எனவே இருநாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். எந்த தவறும் செய்யாதீர்கள். ராணுவத்தீர்வு ஒரு தீர்வாகாது” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.