தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் 40 புதிய சிறு விளையாட்டு மைதானங்களை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு விளையாட்டு ஆனையம் சார்பில் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 39 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். மேலும் 18 மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் காணொளி வாயில் மூலம் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் 2011 முதல் 2021 வரை 10 வருடத்தில், வெறும் 348 கோடி ரூபாய் அளவுக்கு தான் விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்புகள் (InfrastructureFacilities)உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் திமுக ஆட்சியில் இந்த 4 ஆண்டுகளில் மட்டும், 545 கோடி ரூபாய் அளவுக்கு விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை (Infrastructure Facilities) உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 வருடத்தில், அவர்கள் உருவாக்கியது 348 கோடி ரூபாய் அளவுதான். நான்கு வருடத்தில் திராவிட மாடல் அரசு ஆட்சியில் 545 கோடி ரூபாய். இது கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஒவ்வொரு மினி ஸ்டேடியமும் தலா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த பகுதிகளில் பிரபலமாக இருக்கக்கூடிய விளையாட்டு என்ன என்று அறிந்து குறைந்தது 5 விளையாட்டுகளுக்கான வசதிகளுடன் இந்த மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படுகின்றன. மினி ஸ்டேடியம் கட்டப்பட உள்ள 10 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மினி ஸ்டேடியங்கள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு இப்போது விளையாட்டு வீரர்கள் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் சென்ற ஆண்டு 22 மினி ஸ்டேடியங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அவற்றில் இன்றைக்கு 18 மினி ஸ்டேடியங்களுக்கான பணிகளை நாம் துவங்கியிருக்கின்றோம். இந்தாண்டு 40 மினி ஸ்டேடியங்கள் கட்டி முடிக்கப்பட்டும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தேன். அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பித்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
விளையாட்டுத்துறை சார்பாகவே STAR எனும் திட்டத்தை இன்று தொடங்கி இருக்கின்றோம். இன்னும் நுணுக்கமாகச் சென்று திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சியினை அளிப்பது தான் இந்த திட்டத்தினுடைய ஒரே நோக்கம். அவர்களை, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக SPORTS TALENT andRECOGNITION ACADEMY என்கிற STAR அகாடமி இன்றைக்கு துவங்கி இருக்கின்றோம். இந்த அகாடமி மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பயன்பெறுவார்கள்.
இந்த பயிற்சி மையங்களுக்கு புதிதாக 38 Coaches-ம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டினை தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தும் வேண்டும் என்று இந்த அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் எந்தகாலத்திலும் விளையாட்டுத் துறை இவ்வளவு பெரிய வளர்ச்சியை கண்டதில்லை. நம்முடைய அரசு எல்லா வகையிலும் விளையாட்டு வீரர்கள் உங்களுக்கு எப்பொழுதுமே துணை நிற்கும். இதனையெல்லாம், நீங்கள் பயன்படுத்திக் கொண்டு சாதனை மேல் சாதனைகளை படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.