சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அசோசெம் சார்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழகத்தின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்தரங்கை தொடங்கி வைத்து, தமிழகத்தை தரவு மையங்களின் மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: உலகளாவிய கல்வியில் கடந்த நூறாண்டுகளாக தொடர்ந்து தமிழகம் கவனம் செலுத்தி வருவதால் இந்தியாவில் தனித்துவமான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது தமிழகத்தில் பட்டப்படிப்பில் பெண்களின் தேர்ச்சி விகிதம் என்பது 90 சதவீதத்தை நெருங்கியிருக்கிறது. அதுவும் கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களால் உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற பெண்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மூலம் உயர்கல்வி சேரும் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதுதான் தமிழகத்தை தனித்து காட்டுகிறது. முதலீடு என்பது பல்வேறு வழிகளில் இருக்கலாம். ஆனால் மக்கள் வளத்தில் அதிகளவு முதலீடு இருக்க வேண்டும். அந்தவகையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் திறன் மேம்பாடு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து பாரத்நெட் இணைய சேவை மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையவழியில் இணைத்தல், சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் குளோபல் சிட்டி, நவீன நிலை மையம், செமி கண்டெக்டர் மிஷன்- 2030, கோவையில் செமி கன்டெக்டர் உற்பத்தி ஆலை என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் டாடா நிறுவனத்துடன் சேர்ந்து தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களையும் (ஐடிஇஎஸ்) அதிகளவில் உருவாக்கி வருகிறோம்.
இதுமட்டுமின்றி எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்தியாவில் அதிகளவில் தரவுகள் மற்றும் தரவு மையங்கள் இருப்பதால் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் இந்தியா புதுமையின் மையமாகவும் விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் இந்திய தரவு மையத்தின் நிர்வாக இயக்குநர் சுரஜித் சட்டர்ஜி, இக்யுனிக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் மேக்ஸ் பெரி, பி.டபிள்யூ.சி இயக்குநர் ஜக்காரியா மேத்யூஸ், கண்ட்ரோல்-எஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் மைசோர், அசோசெம் பொதுச்செயலாளர் மனிஷ் சிங்கால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.