பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் இருக்கு – பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மக்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்க விரும்புவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேலும், இந்தியா மீது கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிப் போட்டது. காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சீடு தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு பஹல்காமில் இயற்கை அழகை ரசித்து வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

 

இதற்கிடையே இந்தியாவுக்குக் கெடுதல் நினைப்போருக்குத் தக்கப் பதிலடி அளிப்பது தனது பொறுப்பு என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், ஆயுதப் படைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ராஜ்நாத் சிங் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

 

இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையின் கீழ், நீங்கள் நினைப்பது நிச்சயமாக நடக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்றார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்று மக்கள் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், “பாதுகாப்பு அமைச்சராக, எனது வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதும், நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் எனது பொறுப்பு. மேலும், நமது நாட்டின் கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு, ஆயுதப்படைகளுடன் இணைந்து தகுந்த பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு. பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் நன்கு அறிவார்கள். அவரது அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு குறித்து அனைவருக்கும் தெரியும். அவர் தனது வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவும் ஒரு நாளும் தயங்கியது இல்லை” என்றார்.

 

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் நாட்டவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இது மட்டுமின்றி பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இருப்பினும், எல்லையில் அதற்கு இந்தியப் பாதுகாப்புப் படையும் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகின்றன.