டிரம்ப் ஆட்டம் ஓவர்… அமெரிக்கா – சீனா வர்த்தக போரில் புதிய திருப்பம்.!!

வாஷிங்டன்: சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் வித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இதனால் விரைவில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் முடிந்தால் அது இந்தியாவுக்கும் குட் நியூஸ்தான்.

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “145% வரி கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இந்த அளவுக்கு வரி நீடிக்காது. நிச்சயம் குறைக்கப்படும். ஆனால் அது பூஜ்ஜியமாக மட்டும் இருக்காது. ஒரு காலத்தில் சீனாவுக்கு எந்த வரியும் இல்லாமல் இருந்தது. இதனால் நாம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டோம். இனி இதுபோன்ற நிலை இருக்காது.

இனி வரும் காலங்களில் நாமும் நன்றாக நடந்துக்கொள்வோம். அவர்களும் நன்றாக நடந்துக்கொள்வார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் நம்முடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், “இந்த அளவுக்கான வரி தொடர்வது சாத்தியமில்லை. தற்போது இருக்கும் வர்த்தக அமைப்பு நீடிக்காது” என்று கூறியுள்ளார்.

டிரம்ப்பும், நிதி செயலாளர் பேச்சுகளை வைத்து பார்க்கும்போது சீனாவுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதை போல தெரிகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் சீன பொருட்களுக்கு 145% வரியும், சீனாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 125% வரியும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதால் இரு நாடுகளும் தங்கள் பொருட்களை எதிரெதிர் நாடுகளில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த வரி வெறும் இந்த இரண்டு நாடுகளை மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளையும் பாதித்திருக்கின்றன. உதாரணத்திற்கு தங்கள் தயாரிப்புகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகவில்லை எனில், ஆசியாவிலேயே விற்க சீன அரசு முயலும். தங்கள் நாட்டு தயாரிப்புகளுக்கு சிறப்பு மானியங்களை கொடுத்து, மிக குறைந்த விலையில் அதை இந்திய சந்தையில் இறக்கும். இதனால் இந்தியாவில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை கடுமையாக பாதிக்கப்படும்.

இப்போது வரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக டிரம்ப் பேசியிருப்பது ஒட்டுமொத்த வர்த்தக போரையும் முடித்து வைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்தியாவின் எம்எஸ்எம்இ துறை தப்பித்துக்கொள்ளும்.

ஆனால் டிரம்ப் பேச்சில் உண்மைதன்மை எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்னதான் அமெரிக்கா மீண்டும் சீனாவுடன் வர்த்தகத்தை தொடங்கினாலும், அது இயல்பு நிலையில் இருந்ததை போன்று இருக்காது. புதிய விதிகள் சர்வதேச வர்த்தகத்தில் உருவாக்கப்படும். இந்தியா இதற்கேற்றபடி தன்னை தயார் செய்துக்கொள்ள வேண்டும். சீனாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பாத நாடுகள் இந்தியாவை அணுகும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நாம் ரெடியாக வேண்டும். அதே நேரம், பிரிக்ஸ் அமைப்பு மூலம் இந்தியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பிரிக்ஸில் சீனாவும், ரஷ்யாவும்தான் பெரிய நாடுகள். ஆகவே ரஷ்யாவை வைத்து பிரிக்ஸ் மூலமாக நமது வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.