குடியரசு தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு..!!

நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு இன்று நடைபெற உள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏ.க்களும் இன்று வாக்களிக்க உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் பிங்க நிற வாக்குச்சீட்டிலும், எம்.பி.க்கள் ‘பச்சை’ நிற வாக்குச்சீட்டிலும் வாக்களிக்க உள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குப்பெட்டிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து பாதுகாப்புடன் விமானத்தில் தனி இருக்கையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதில் வெற்றி பெறும் வேட்பாளர், வரும் 25-ம் தேதி நாட்டின் புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.