அமெரிக்க பைக்குகள் மற்றும் மது பானத்திற்கு இந்தியாவில் வரி குறைப்பு..!

மெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியா வைன் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன், அதற்கு பதிலடியாக வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதனையடுத்து, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும், இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இன்னும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகள், போர்பன் விஸ்கி மற்றும் கலிபோர்னியா வைன் ஆகியவற்றுக்கு வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கான வரியை 50-இல் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும் வரியை குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், கடந்த காலத்தில் போர்பன் விஸ்கிக்கு விதிக்கப்பட்ட 150 சதவீத வரி 100 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், வரிக் குறைப்பு மட்டும் அல்லாமல், அமெரிக்க மருந்து பொருட்கள் ஏற்றுமதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியாவில் வளர்ச்சியடைந்து வரும் மருந்துச் சந்தையில், தனது பங்கை அதிகரிக்க அமெரிக்கா விரும்புகிற நிலையில், இந்தியாவும், தனது ஏற்றுமதிக்கு சாதகமான அம்சங்களை பெற நினைக்கிறமை குறிப்பிடத்தக்கது.