கீழடி அகழாய்வில் முதல் முறையாக பானை வடிவிலான உறைக் கிணறு கண்டெடுப்பு..!!

மதுரை: மானாமதுரை அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக பானை வடிவிலான உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியாக மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான கூடுதல் சான்றுகளை தேடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 16 குழிகள் தோண்டப்பட்டு இரும்பு எச்சங்கள், நீள்வடிவ தாயக்கட்டை, பானை ஓடுகள், இருவண்ணப்பானைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருள்கள், கொந்தகையில் 30 முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன. கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழிகளில் கடந்த வாரம் இரும்பு எச்சங்களும், இரு வண்ணச்சாயக்கிண்ணமும் கிடைத்தன. அதே குழியில் நேர்த்தியாக செங்கற்களால் கட்டப்பட்ட சுவரும் அதன் அருகிலேயே மீன்வடிவ உறைகிணறு, பானை போன்ற உறைகிணரும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திலேயே மிக பெரிய உறைகிணறு கீழடியில் நடைப்பெற்ற 6-ம் கட்ட அகழாய்வின் போது 32 அடுக்குகளுடன் கிடைத்தது.இதனிடையே விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வராய்ச்சியில் அழகிய வேலை பாடுகளுடன் கூடிய சுடு மண்ணால் ஆன திமிருடன் கூடிய காளை உருவம் கண்டறியப்பட்டிருக்கிறது.