நாளை களைகட்டுகிறது ஐபிஎல் திருவிழா… முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதல்..!

பிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கடந்த சீசனில் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான கேப்டன்சியால் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றது. ஆகையால் இந்த சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி அதே உத்வேகத்தில் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னை அணியை பொறுத்தவரையில் கடந்த சீசன் பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த அணி மொத்தம் நடைபெற்ற 14 லீக் போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 10 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. இதனால் லீக் சுற்றுடன் சென்னை அணி வெளியேறியது.

இந்நிலையில், இந்த சீசனில் அந்த அணி உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சீசன் அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், இந்த முறை கட்டாயம் கோப்பையை வெல்ல அந்த அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் பயிற்சி மேற்கொண்டுவந்த சென்னை வீரர்கள், முதல் போட்டியில் விளையாட அகமதாபாத் புறப்பட்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது..