நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்… கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை.. கர்நாடக முதல்வர் பசவராஜ் எச்சரிக்கை.!!

பெங்களூரு : ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஹைகோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தீர்ப்புக்கு எதிராக யாராவது கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

ஹிஜாப் பிரச்சனை தீவிரமடைந்த வரும் நிலையில் பதற்றத்தைத் தணிக்க பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் உடுப்பி அரசு பல்கலைக்கழக பெண்கள் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி மாணவிகள் ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜே.எம் ஹாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு தொடர்ந்த மாணவிகள் சார்பாக வழக்கறிஞர் தேவதாத் காமத், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல என்றும் , கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ள நிலையில் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தீர்ப்புக்கு எதிராக யாராவது கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். தீர்ப்பு வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், மாணவர்களை தவறாக வழிநடத்த நினைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பதிலளித்துள்ள கர்நாடக மாநில கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், “அனைத்து மாணவர்களும் சமமாக இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் சீருடை உள்ளது, எனவே இந்த தீர்ப்பின் மூலம் இளம் மாணவர்களின் மனதில் எந்த தாழ்வு மனப்பான்மையும் எழாது” என்றார். இதேபோல் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் அடிப்படை வேலை படிப்பதுதான். எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.” என கூறினார்.