குஜராத் தமிழர்கள் பாஜக வுக்கே ஓட்டு போடுகிறார்கள் – வானதி சீனிவாசன்..!

சென்னை: குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் பா.ஜ.,வுக்கே ஓட்டளிப்பதாக, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி தெரிவித்துள்ளார்.குஜராத்தில், தேர்தல் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்ய நாடெங்கும் இருந்து, மகளிரணி நிர்வாகிகள் வந்து இருந்தனர். அவர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும், மகளிரணி தேசிய தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவும், 10 நாட்களுக்கும் மேலாக குஜராத்தில் பிரசாரம் செய்தேன்.பா.ஜ.,வை பொறுத்தவரை, வடக்கு, மத்திய, தெற்கு, சவுராஷ்டிரா என, நான்கு மண்டலங்களாக குஜராத் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மண்டலங்களிலும் பிரசாரம் செய்தேன். பா.ஜ., தேசிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அணிகளின் தேசிய தலைவர்களுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு மூன்று நாட்கள் தங்கி பிரசாரம் செய்ய, கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி எனக்கு ஒதுக்கப்பட்ட, ஆமதாபாத் மாவட்டம், அசர்வா தொகுதியில் மூன்று நாட்கள் தங்கி, வீடு வீடாக பிரசாரம் செய்தேன்.

இத்தொகுதியில், 500 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களை வீடு, வீடாக சென்று சந்தித்தேன். மோடி மூன்று முறை வென்ற மணிநகரில், 2,000 தமிழ் குடும்பங்கள் உள்ளன. முதல்முறையாக, மோடி போட்டியிட்ட ராஜ்கோட் தொகுதியிலும், கணிசமான தமிழர்கள் உள்ளனர்.

தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் சூரத்திலும், பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் நர்மதா மாவட்டத்திலும் பிரசாரம் செய்தேன். பிரசாரத்தின் போது, ஏராளமான தமிழர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழர்கள் கட்டியுள்ள முருகன், விநாயகர், மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டேன். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி மீது பேரன்பு கொண்டுள்ளனர். பெரும்பாலான தமிழர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதாகவும், இந்த தேர்தலிலும் பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.