திணறும் உலக நாடுகள் … மாஸ் காட்டி ஒளிரும் இந்தியா… பொருளாதாரம் வேற லெவல்.. சர்வதேச நிதியம் புகழாரம்..!!

வாஷிங்டன்: உலகின் டாப் 20 பொருளாதாரங்களை உள்ளடக்கி உள்ள ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய கருத்துகளைச் சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளார்.

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டிற்கு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வரும். ஜி-20 என்பது சர்வதேச அளவில் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளாகும்.

இந்தியா தலைமை ஏற்று இருக்கும் போது சுமார் 200க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெற உள்ளது.

இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா செய்தியாளர்களிடம் பேசும் போது சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசுகையில், “இந்த இருண்ட காலத்தில் இந்தியாவை ஒரு பிரகாசமான புள்ளி என்று நாம் அழைக்கலாம். ஏனெனில் இந்த கடினமான காலங்களில் கூட இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகும். இதில் முக்கியமானது இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல். அது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று உள்ளது. டிஜிட்டல் ஐடி தொடங்கி அனைத்தையும் டிஜிட்டல் முறையில் மாற்றியது இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். இப்படியொரு சூழலில் இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கிறது. இதில் இந்தியா நிச்சயம் அடையாளத்தை விட்டுச் செல்லும் என நம்புகிறேன்.

அது டிஜிட்டல் பணம் உட்பட டிஜிட்டல் மயமாக்கல் பகுதியாக இருக்கலாம். கிரிப்டோ கரேன்சிகளுக்கு கட்டுப்பாடு தேவை என்பது எங்களுக்குத் தெரியும். பல்வேறு நாடுகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். இது பொதுவான நெறிமுறைகள் தேவை என்பதை நாங்களும் வலியுறுத்துகிறோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கூட இந்தியா பெரிய மாற்றத்தை விட்டுச் செல்லலாம். சூரிய ஒளி உள்ளிட்ட பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அடிப்படையில் இந்தியா முன்னேறியுள்ளது என்பது பலருக்கும் தெரியும். இந்தியாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவை நிச்சயம் பெருமை அடையவே செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இப்போது ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இதுவரை 5ஆவது பொருளாதாரமாகப் பிரிட்டன் இருந்த நிலையில், இப்போது அதை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தை பிடித்து உள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பல நாடுகளும் திணறும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக சில வல்லுநர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.