கோவை :இந்திய அளவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகும் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர் .மேலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் குறித்து கோவை மாநகர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாநகரில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 42 பேர் இறந்துள்ளனர் .அதே நேரத்தில் நடப்பாண்டில் ஜூன் மாதம் இறுதி வரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும்.ஹெல்மெட் அணிவது குறித்து பல இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கும் ஹெல்மெட் அணிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
Leave a Reply