கத்தார் சிறையிலிருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..!

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்தியாவின் கடற்படையில் பணியாற்றிய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர்.

இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி, அதுதொடர்பான சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேர்த்ததாகவும், அதை அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு கடந்த 2022ம் ஆண்டு கைது செய்தது. இதையடுத்து, அவர்களை அந்த நாட்டு சிறையில் தனிமை சிறையில் அடைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்திய அரசுக்கும், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் அவர்கள் 8 பேருக்கும் அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இது இந்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக மத்திய அரசு அவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. தொடர்ந்து மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அவர்கள் 8 பேரையும் கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவர்கள் விடுதலை செய்யப்பட்டது அவர்கள் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள் 8 பேரில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர். ஒருவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவரும் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலையானவர்கள் இதுதொடர்பாக கூறும்போது, நாங்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்பியது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக நாங்கள் பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும். அவரது நடவடிக்கை காரணமாகவே இது சாத்தியமானது என்றனர்..