கோவை சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் பஸ் நிலையம் முன்புறமுள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைசேர்ந்த தீபன் (வயது 25) கைது செய்யப்பட்டார்.
இதேபோல பீளமேடு போலீசார் பயோனியர்மில் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தினார்கள். அங்கு 125 பாக்கெட் குட்கா இருந்தது தெரிய வந்தது .இது தொடர்பாக வியாபாரி ஜெயஜோதி (வயது 46) கைது செய்யப்பட்டார். சரவணம்பட்டி போலீசார் சின்ன வேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை முன் உள்ள பெட்டி கடையில் நடத்திய சோதனையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 42) கைது செய்யப்பட்டார்.
இதே போல புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காடங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் ( வயது 26)கைது செய்யப்பட்டார் . சரவணம்பட்டி போலீசார் துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் நடத்திய சோதனையில் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ரவிச்சந்திரன் ( வயது29) கைது செய்யப்பட்டார். மற்றொரு கடையில் குட்கா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் அம்மா பட்டினம் கண்ணன் ( வயது 34 ) கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது..





