இருகூர் தண்டவாளத்தில் ஆண் குழந்தை பிணத்தை வைத்து நரபலி பூஜை நடத்திய கணவன், மனைவி உட்பட 6 பேர் கைது..!

கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் கடந்த 14- ஆம் தேதிஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அந்த குழந்தையின் உடல் அருகே மஞ்சள் குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல், ரத்தம் ஆகியவை கிடந்ததது .இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியது. 2 வயது குழந்தை தண்டவாள பகுதிக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லை. எனவே அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதை அறிந்த போதனூர் ரயில்வே போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை எப்படி உயிரிழந்தது? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது . அதில் 3 ஆண்கள் 3 பெண்கள் என 6 பேர் அந்த பகுதிக்கு வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது . அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை சிங்கநல்லூர் நந்தா நகர் ,டெக்ஸ் டூல் லே-அவுட்டை சேர்ந்த மரிய லூயிஸ் (வயது 47) அவரது மனைவி ராதாமணி (வயது 37) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வைசாலி (வயது 44) அவரது தம்பி பிரவீன் குமார் ( வயது 29) அவருடைய மனைவி கிருத்திகா (வயது 26) வைசாலியின் மற்றொரு தம்பி அக்சய் (வயது 27) என்பது தெரிய வந்தது.. இதையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 6 பேரையும் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த 6 பேரும் சேர்ந்து உயிரிழந்த 6 மாதமே ஆன ஆண் குழந்தை தண்டவாளத்தில் போட்டுச் சென்றதும், ரயில் ஏறியதும் அந்த குழந்தையின் உடல் இரண்டு துண்டாக போனதும் தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- மரியலூயிஸ் – ராதா மணி தம்பதியினருக்கு திருமணம் ஆகி 27 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அவருடைய வீட்டின் அருகே குடியிருந்து வரும் வைசாலியை அடிக்கடி சந்திக்கும் ராதா மணி தனக்கு குழந்தை இல்லை எனக் கூறி அழுதுள்ளார். உடனே அவர் மராட்டிய மாநிலத்தில் தனது தங்கை இருக்கிறார். அவருக்கு தெரிந்த ஒரு குடும்பம் உள்ளது. அவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது .அந்த குழந்தையை தத்து கொடுப்பதாக கூறியுள்ளனர். எனவே அங்கு சென்று குழந்தையை தத்தெடுக்கலாம் என்று கூறினார் .அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதனால் ராதாமணியும், வைசாலியும் மராட்டிய மாநிலத்திற்கு சென்று ஒரு தம்பதியினரிடம் 6 மாத ஆண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு கடந்த ’13 ஆம் தேதி காலை கோவை வந்தனர். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதில் அன்று இரவு அந்த குழந்தை உயிரிழந்ததால் அதிர்ச்சிஅடைந்த ராதாமணி கதறி அழுதார். அவர் இந்த விஷயம் குறித்து வைசாலியிடம் தெரிவித்தார் .இந்த குழந்தையை முறையாக தத்து எடுக்கவில்லை என்பதால் அடக்கம் செய்யமுடியாது. அப்படி அடக்கம் செய்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் .எனவே ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்று குழந்தையை உடலை வீசி விடலாம் என்று கூறியுள்ளனர் . இதையடுத்து அன்று இரவு ராதாமணி அவருடைய கணவர் மரியலூயில் உட்பட 6 பேரும் அந்த குழந்தையின் உடலை  எடுத்துச் சென்றனர். பின்னர் ராவுத்தூர் தரைப்பாலம் அருகே வந்ததும் தண்டவாளத்தில் குழந்தையின் உடலை வைத்தனர் . குழந்தை உயிரிழந்தது சனிக்கிழமை என்பதால் இறுதிச் சடங்காக குழந்தை உடல் தண்டவாளத்தில் வைத்து விட்டு கருப்ப கோழியை அறுத்து போட்டதும், அதன் அருகே மஞ்சள் கலந்த மசால் பொடி தூவி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் குழந்தை மீது ஏறியதில் அதன் உடல் இரு துண்டானது. இந்த 6 பேரும் குழந்தையை தத்தெடுக்கும் சட்ட முறையை பின்பற்றாமல் சட்ட விரோதமாக குழந்தையை வாங்கியதும் அப்படி வாங்கிய குழந்தை உயிரிழந்ததும் அதன் இறப்பைப் பற்றி தகவலை முறைப்படி தெரிவிக்காமல் மறைத்து தண்டவாளத்தில் வைத்ததாகவும் அவர்கள் மீது கைது நடக்க எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..