தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்ட 56 ஆயிரம் சிம் கார்டு முடக்கம்.!!

 தமிழகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டதாக 56 ஆயிரம் சிம் கார்டுகளை முடக்கி, விற்பனை பிரதிநிதிகள் 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாள்தோறும் வங்கியிலிருந்து பேசுவதாகவும், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் செல்போன் மூலம் மர்ம நபர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் போலி ஆவணங்களைக் கொடுத்து வாங்கப்பட்ட சிம் கார்டுகள் என்பதால், வழக்குகளின் விசாரணையின்போது குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸாருக்கு அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து மாநில சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை தொடங்கி, விவரங்களைச் சேகரித்து வந்தனர். அந்த விவரங்களை சிம் கார்டு நிறுவனங்களுக்கு அனுப்பி அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை 55 ஆயிரத்து 982 சிம் கார்டுகளை சைபர் கிரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். அதே சமயம் இது போன்ற போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை விற்கும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டனர்.

இந்த சிம் கார்டுகள் எந்த விற்பனை பிரதிநிதியிடமிருந்து வாங்கப்பட்டவை, எந்த நிறுவனத்தின் சிம் கார்டுகள் என விசாரித்த சைபர் கிரைம் போலீஸார், விசாரணையின் அடிப்படையில் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு மாநில சைபர் கிரைம் போலீஸாருக்கு, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் பரிந்துரைத்தது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலி ஆவணங்களைப் பெற்று சிம் கார்டுகளை விற்பனை செய்பவர்களைக் கண்டறியத் தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர்.

விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 12 வழக்குகளைப் பதிவு செய்த போலீஸார்
5 பேரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்
எனவும் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.போலியான ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டு விற்கும் நபர்களை கைது செய்யவும் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.