500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்… 2000 ரூபாய் நோட்டு குறித்து முதல்வர் கடும் விமர்சனம்..!

ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி நேற்று திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

மே மாதம் 23-ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதனால், 2,000 ரூபாய் நோட்டு செப்.30 வரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த முடிவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரமே ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவில், 2,000 நோட்டு விவகாரத்தில் 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள் என விமர்சித்து, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை மறைக்க ஒற்றை தந்திரமே என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016-ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. இந்தநிலையில், ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வாங்கி அறிவித்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.