கோவையில் 387 ஆயுதப்படை காவலா்கள் திடீர் பணியிட மாற்றம்..!

கோவை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இவற்றில் சுமாா் 1,500 காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், கோவை மாநகரில் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்பட்டு வந்தது.போதிய அளவில் காவலா்கள் இல்லாததால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பதில் சிக்கல்கள் நிலவுவதாக காவல் துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வந்தனர். அதிலும் கோவையில் அண்மையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணிகளில் காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த 387 காவலா்கள் நேற்று வெள்ளிக்கிழமை திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலா்கள் அனைவரும் ஓரிரு நாள்களுக்குள் பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயுதப்படை காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கோவை, மதுரையில் இருந்து சுமாா் 400 காவலா்கள் கோவை ஆயுதப்படைக்கு மாற்றப்பட உள்ளனர்.