குட்டையில் மூழ்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள போகம்பட்டி ,விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40 )கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது மகள் தமிழ்ச்செல்வி ( வயது 15) அண்ணன் மனோகரின் மகள் புவனா (வயது 13) ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகிய அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அந்த குட்டைக்கு சென்று பார்த்தனர் .அப்போது கரையில் அவர்களது காலணிகள், உடைகள் கிடந்தன. மேலும் குட்டையில் தமிழ்ச்செல்வி பிணமாக மிதந்து கொண்டிருந்தாள். இது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கும், சூலூர் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து குட்டையில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன் மற்றும் புவனா ஆகியோர் பிணமாக மிதந்தது தெரியவந்தது. 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதிக்க சிங்காநல்லூர் இ. எஸ் .ஐ.மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குட்டையில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்ற விட்டதால் 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது இது தொடர்பாக சுல்தான் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தண்ணீரில் மூழ்கி பலியான தமிழ்ச்செல்வி சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 – ஆம் வகுப்பும், புவனா போகம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8 – ஆம் வகுப்பும் படித்து முடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..