2 கிலோ காஸ் சிலிண்டர் பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் – இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய திட்டம்..!

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் வசதிக்காக ‘சோட்டு’ என்ற பெயரில் 5 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டரையும் இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதை பிரபலப்படுத்தும் நோக்கில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் 2 கிலோ சிலிண்டரை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டரை ரூ.971 செலுத்தி சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம். காஸ் தீர்ந்ததும், மாதம்தோறும் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தி நிரப்பிக் கொள்ளலாம்.