கடந்த ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்- போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில், மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 மானியம் உள்ளிட்ட பெண்களைக் கவரும் அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மற்றும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற அன்று சட்டப்பேரவைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

அதனையடுத்து, திருநங்கைகளுக்கும் இலசப் பயணம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்த நிலையில் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் சாதாரண மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டுவருகிறது.

இந்த இலவசப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக குறைந்த ஊதியத்துக்கு வீட்டு வேலை போன்ற பணிகளுக்குச் செல்லும் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தேசிய அளவிலும் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில், மாநகரப் பேருந்திகளில் கடந்த ஓராண்டில் பெண்கள் 131 கோடி முறை இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2,100 கோடி ரூபாய் செலவு என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.