11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி.!!

சென்னை: தமிழகம் முழுவதும் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது..

இதில் 11ம் வகுப்பு தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் டாப் 5 மாவட்டங்கள் மகிழ்ச்சியில் உள்ளன

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அதேபோல மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல் இந்த வருடமும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 98.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளுடன் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் +1 தேர்வுகளை எழுதினார்கள்.. இவர்கள் தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35% மதிப்பெண்கள் பெறுதல் அவசியமாகும். இந்த முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது.. இதில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 97 சதவீதமும், விருதுநகர் 96.2 சதவீதமும், கோவை 95.8 சதவீதமும், தூத்துக்குடி 95.1 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தை பிடித்த அரியலூர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளது.. காரணம், கடந்த 2023 மற்றும் 2024 கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 4 ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 7534 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

இதன் முடிவுகள் கடந்த வருடம் மே 14ம் தேதி வெளியாகியிருந்தது.. அப்போது, அந்த தேர்வில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 143 மாணவிகளும், 3 லட்சத்து 35 ஆயிரத்து 396 மாணவர்களும் என மொத்தமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 172 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.. இந்த தேர்விலும் மாணவர்களை விட 7.43 சதவீதம் மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற விவரங்களை பார்க்கும் போது கோயம்புத்தூர் ஈரோடு, திருப்பூர் விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்திருந்தன.. இதற்கு அடுத்தாற்போல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், வேலூர் ஆகிய ஆகிய மாவட்டங்கள் கடைசி 5 இடங்களை பிடித்திருந்தன.

அதாவது, 5வது மாவட்டமாக இடம்பெற்றிருந்த அரியலூர்தான், இப்போது டாப் கியரில் மேலே எழுந்துள்ளது.. இந்த ஆண்டுக்கான 11ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.