11 மாவட்டங்கள்…15 அரசு அதிகாரிகளின் வீடுகள் … 57 இடத்தில் ரெய்டு.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்… தங்க நகைகள்… கர்நாடகாவில் லோக் ஆயுக்தா சோதனை.!!

பெங்களூர்: கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் பெங்களூர் உள்பட 11 மாவட்டங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 57 இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.

இதில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கைக்கடிகாரங்கள் சிக்கின.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் முதல் முதலாக நேற்று மாநிலம் முழுவதும் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அரசு அதிகாரிகளாக பணியாற்றி கொண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூர், பெங்களூர் புறநகர், மண்டியா, மைசூர், சிவமொக்கா, தட்சின கன்னடா, ஹாவேரி, சாம்ராஜ்நகர், உடுப்பி, துமகூரு, கொப்பல் ஆகிய 11 மாவட்டங்களில் மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

பெங்களூர் பசவேஸ்வரா நகரில் உள்ள பெஸ்காம் மின்வாரி அதிகாரி ரமேஷ், பெங்களூரு விஜயநகரில் உள்ள தொழிலாளர் துறை துணை இயக்குனர் நாராயணப்பா, ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் கட்டுமான மைய என்ஜினீயர் வகீஷ் ஷெட்டர், துமகூருவில் அரசு அதிகாரி நரசிம்ம மூர்த்தி, கொப்பலில் அரசு அதிகாரி சின்சோலிகர், மைசூருவில் அரசு அதிகாரி மகேஷ் குமார் உள்பட 15 பேரின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின்போது லோக்ஆயுக்தா போலீசார் அரசு அதிகாரிகளின் வீடுகளில் உள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்களை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டில் உள்ள தங்கநகை, வெள்ளி பொருட்கள் உள்பட விலையுயர்ந்த பொருட்களின் மதிப்புகளை கணக்கீடு செய்தனர். அப்போது சில அதிகாரிகள் கணக்கில் காட்டாத வகையில் ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இத்தகைய பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை சிக்கின. பெங்களூர் பெஸ்காம் அதிகாரி ரமேஷ் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள், ரூ.1½ கோடி மதிப்பிலான ரொக்கம் சிக்கியது. ஹாவேரில் உள்ள வகீஸ் செட்டர் வீட்டில் கணக்கில் வராத ரூ.4¾ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் பிற அதிகாரிகளின் வீடுகளில் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் சிக்கின. மேலும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோல் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் மொத்தம் 57 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்களை லோக் அயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.