பாரமுல்லா: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீர் கிராமிய நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ‘கஷுர்ரிவாஜ்’ கலைத் திருவிழா நேற்றுஏற்பாடு செய்யப்பட்டது. பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட குத்துவாள் ராணுவ பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
பேராசிரியர் ஷவுகத் அலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் காஷ்மீர்பாரம்பரிய இசை, எழுத்துக்கலை, நடனக்கலை ஆகியவற்றைக் கலைஞர்கள் அரங்கேற்றினர். எழுத்துக்கலை நிபுணர் ஷஃபி மீர் காஷ்மீரின் தனித்துவமான எழுத்துருக்களைக் காட்சிப்படுத்தினார். சந்தூர் இசைக்கலைஞர் நசீர் அகமது மீர் அற்புதமாக சந்தூர் இசைக்கருவியை மீட்டி செவிக்கு விருந்து படைத்தார்.
இதையடுத்து, 10 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து நிகழ்த்திய ரவுஃப் கிராமிய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகளாவிய சாதனை கூட்டமைப்பு இந்த நடனத்தை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
பாரமுல்லா மாவட்ட துணை ஆணையர் மிங்கா ஷெர்பா, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், மேஜர் ஜெனரல் ராஜேஷ் சேத்தி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
Leave a Reply