தி.மு.க.பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் மீட்பு: தஞ்சாவூர் மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.!!

தஞ்சாவூரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியது மட்டுமின்றி அவரிடம் இருந்து சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி சொந்தமான சுதர்சன சபா அமைந்துள்ளது. இந்த சபாவில் ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை திமுக முன்னாள் கவுன்சிலர் ராமநாதன் என்பவர் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த 1991ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி சபாவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் உறவினர்களும் பிற பதவிகளையும் ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும், சபாவில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். வளாகத்தை மதுபான பாராகவும், ஓட்டல், பேக்கரி மற்றும் பிற கடைகளை நடத்துவதற்கு உள் வாடகையாகவும் விட்டு பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் சம்பாதித்துள்ளனர். அது மட்டுமின்றி மாநகராட்சிக்கும் எவ்வித பணமும் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார். இவரது நடவடிக்கையை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூட்டி சீல் வைத்தனர். மேலும், குத்தகை விதிகளை மீறி ஆக்கிரமித்து வைத்திருந்த திமுக பிரமுகரின் நிலத்தையும் இடித்து அதனை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். இந்த சம்பவத்தின்போது 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.