கோவை ஓட்டலில் பல்லி கிடந்த கோழி குழம்பு சாப்பிட்ட 10 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்.

கோவை மே 28 நாமக்கல் மாவட்டம் டி. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 39) விசைத்தறி உரிமையாளர். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது உறவினர்கள் கலையரசு (வயது 50) அருண் (வயது 43) ஆகியோருடன் நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சரவணன் என்பவரது ஆட்டோவில் அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கினார். அதன்பிறகு மதியம் அவர் கோவை புரூக்பீல்ட்ஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர் .அங்கு கலையரசுக்கு கோழி குழம்பு ஊற்றப்பட்டது அதில் கிடந்த கோழிக்கறி துண்டு என்று கருதி வாயில் வைத்து சாப்பிட முயன்றார். அப்போதுதான் அது கோழி கறி அல்ல.செத்து கிடந்த பல்லி என்பது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து அந்த பல்லியை எடுத்து தனது இலையின் மேல் வைத்தார் .இது பற்றி அவர் ஓட்டல் உரிமையாளரிடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம்அடைந்த அவர் கோழிகுழம்பில் பல்லி கிடப்பதால் யாரும் சாப்பிட வேண்டாம் என்று கூறினார். இதை தொடர்ந்து அங்கேயே மயக்கம் அடைந்தார். அதை பார்த்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பல்லி கிடந்த கோழி குழம்பு சாப்பிட்ட அண்ணாதுரை, அருண் ,ஆட்டோ டிரைவர் சரவணன் அங்கு சாப்பிட்ட பெண்கள் உட்பட 10 பேருக்கும் வாந்தி – மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே கலையரசு வை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சொந்த ஊரான நாமக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். வாந்தி மயக்கம் ஏற்பட்ட அனைவரும் ஆட்டோவில் மற்றும் கார்களில் மருத்துவமனைக்குச் சென்றனர். உடனே ஊழியர்கள் யாரும் உள்ளே வராத வகையில் திடீரென்று ஓட்டலை இழுத்து மூடினர் .இது குறித்து தகவல் அறிந்தது கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அனுராதா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராமசாமி தலைமையில் அந்த ஒட்டலுக்கு விரைந்து சென்று உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடம் கோழி குழம்பில் பல்லி எப்படி விழுந்தது ? என்பது குறித்து விசாரணை நடத்தினர் .அந்த ஓட்டலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். உணவு பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றியதும் மீண்டும் அனுமதி கொடுத்த பிறகுதான் ஒட்டலை திறக்க வேண்டும் .அதுவரை ஓட்டல் செயல்பட தடை விதித்தும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.