மோடி ஆட்சியில் இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்பு- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்..!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.1.25லட்சம் கோடி கறுப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது, ரூ.4,600 கோடி முறைகேடான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எந்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாக முறை குறித்து டெல்லியில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அரசின் திட்டங்கள் குறித்து கூறுகையில் மக்களுக்காக அரசு செலவிடும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டும்தான் அவர்களுக்கு சென்று சேர்கிறது, 85 பைசா சேர்வதில்லை. இடையில் இருப்போருக்கு சென்றுவிடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் நேரடி வங்கிப்பணப்பரிமாற்றம் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தப்படுகிறது. இதனால், எந்தவிதமான முறைகேடும் நடக்காமல் 100 சதவீதம் அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாகச் சென்று சேர்கின்றன.

இதுவரை பிரதமர் மோடியின் ஆட்சயில் ரூ.26 லட்சம் கோடி மக்களுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ரூ.2.25 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. நேரடி வங்கிக்கணக்கு மூலம் நிதியுதவி அளிக்கப்படுவதால் ஏற்படும் சேமிப்பை கணக்கிட்டுப்பாருங்கள்

குறுக்குவழி அரசியலில் தேசம் செல்லக்கூடாது, நேர்மையான நிர்வாகத்தில் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெளிவான பார்வையுடன் உள்ளார். பிரதமர் மோடி டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கி சிறந்த நிர்வாகம் நாட்டில் ஒவ்வொருவரையும் சென்று சேர உறுதி செய்துள்ளார்.

சிறந்த நிர்வாகம் என்பது பன்முகத்தன்மை கொண்டது. டிஜிட்டல் முறை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் 45 கோடியாக இருந்த ஜன்தன் வங்கிக்கணக்கு, 135 கோடிக் கணக்காக அதிகரித்தது. டிஜிட்டல் கட்டமைப்பு வந்தபின், மக்களுக்கு பலன் நேரடியாகச் சென்று சேர்ந்தது.

தடுப்பூசி திட்டத்தை முறையாகச் செயல்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறுகின்றன. ஆனால், பிரதமர் மோடியின் கீழ் இந்தியா 216 கோடி தடுப்பூசிகளை டிஜிட்டல் தளத்தின் மூலம் சாத்தியமாகியுள்ளது.

ஏபிஎம்சி திட்டத்தில் 125 கோடி விவசாயிகள் தங்களை பதிவு செய்துள்ளனர். மத்திய 3.50 லட்சம் கோடி பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்கிறது. வருமானவரி மதிப்பீடு, ரீபண்ட், ஏலம், அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

 

ஸ்பெக்டரம் ஏலம் 2014 முதல் 2022ம் ஆண்டுவரை ரூ.4.50லட்சம் கோடி திரட்டப்பட்டு, ஊழல் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணமும் அரசுக்கு வந்துள்ளது. பினாமி சொத்து முடக்கத்தில் இதுவரை ரூ.4,300 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.1,254 லட்சம் கோடி கறுப்புப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.75 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

2014 தேர்தல், 2019 தேர்தல் தற்போது நடந்த குஜராத் தேர்தல் வெற்றி அனைத்தும் பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி. நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த நிர்வாகம் முக்கியம், உண்மையான பலன்கள் அப்போதுதான் மக்களுக்கு சென்று சேரும் என்பதை பிரதமர் மோடி தீவிரமாக நம்புகிறார்.

குறுக்குவழி அரசியலையும், சிறந்த நிர்வாகத்தையும் அவ்வப்போது பிரதமர் மோடி ஒப்பிடுவார். நல்லாட்சி அனைவருக்கும் நல்லது. குறுக்குவழி அரசியல் நாடு, மக்கள் மற்றும் சமுதாயத்திற்கு கேடு என நம்புகிறாரஇவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.