அதிமுகவின் 3-ம் கட்டத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தனது அதிரடி அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களை விளக்கினார்.
நிதிச் சுமையை எப்படிக் கையாளுவீர்கள்? என்ற கேள்விக்கு அதிமுக ஆட்சியில் வருவாயைப் பெருக்கி, சொன்னதைச் செய்வோம். கொரோனா காலத்திலேயே நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதி மேலாண்மை செய்த அனுபவம் எங்களுக்கு உண்டு என உறுதியளித்தார்.
உச்சநீதிமன்றக் கருத்து குறித்த கேள்விக்கு, திமுக ஆட்சியில் மக்கள் வாழவே முடியாத துயரத்தில் உள்ளனர். இது இலவசம் அல்ல. அவர்களைக் கைதூக்கி விடும் ‘கருணைத் தொகை’. மக்கள் மீதான அக்கறையினால் வழங்கப்படும் ஒரேமுறை உதவி இது எனத் தெளிவுபடுத்தினார்.
டி.டி.வி. தினகரன் பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும் என ஒற்றை வரியில் பதிலடி கொடுத்தார்.
வருவாயைப் பெருக்க வரி உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு, இப்போதே எதையும் சொல்ல முடியாது, ஆனால் மக்கள் நலனே முக்கியம்” என பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.






