பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபே’ ஓட்டலில் குண்டு வெடிப்பு – டி.கே. சிவக்குமார் நேரில் ஆய்வு..!

பெங்களூரு: பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 9 பேர் காயமடைந்தனர். இந்த சூழலில் நிகழ்விடத்தில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

‘இந்த குற்றச் செயலை செய்த நபருக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் ரவை இட்லி வாங்கியுள்ளார். ஆனால், அதை சாப்பிடாமல் பையை வைத்து விட்டு சென்றுள்ளார். அவரை விரைந்து பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’ என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் நிலை குறித்த விவரத்தையும் அவர் கேட்டறிந்தார். எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்யாமல் அரசுடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். முன்னதாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25) ஆகிய இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என‌ தெரிய வந்துள்ளது. காயமடைந்த 9 பேரும் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.