இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

தற்போது சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது .தமிழகத்தில் மிகவும் பவர்புல் அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. மின்சாரம் மற்றும் மது விலக்கு என இரு முக்கிய துறைகளைக் கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி.இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் முதலில் ஐடி அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத் துறையினர் சோதனை செய்த நிலையில், அன்றிரவே அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி கைது: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இருப்பினும், அன்றைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனையிலும் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இதய பிரச்சினை இருந்த நிலையில், அவருக்கு ஆப்ரேஷனும் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அவர் மீது 120 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர் ஜாமீன் பெறக் கடுமையாக முயலும் போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கிடையே அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் செந்தில் பாலாஜி கைதாகியுள்ள போதிலும், அவர் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார். அவர் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்க உத்தரவிடுமாறு வழக்கு தொடரப்பட்டது. செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவிநீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற சென்னை ஐகோர்ட், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்குகளை முடித்துவைத்தது.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ரவி மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கை சரியானது என்றும் தெரிவித்துள்ளது.