“உங்க விஜய், நான் வரேன்”… கதி கலங்கும் திராவிட கட்சிகள்..!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. இதனால், தமிழக அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி மற்றும் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலம் தழுவிய பயணங்களில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது மாநிலம் தழுவிய மாவட்ட வாரியான மக்கள் சந்திப்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். திருச்சியில் இன்று தொடங்கும் இந்த சுற்றுப்பயணமானது, ஒவ்வொரு சனிக்கிழமையும் திட்டமிடப்பட்டு டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட லோகோவில், ”உங்க விஜய் நான் வரேன், வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு கடும் நிபந்தனைகளுடனேயே காவல்துறை அனுமதி அளித்துள்ளது.அதன்படி, அரியலூர் உட்கோட்ட எல்லைக்குள் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். பரப்புரைக்கு வரும் கட்சியினர் அனைவரும் காலை 11.25 மணிக்குள் பரப்புரை நடக்கும் இடமான அரியலூர் பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

விஜய் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கீழப்பழுவூர் புறவழிச்சாலையில் இருந்து கீழப்பழுவூர் திடீர் குப்பம், வாரணவாசி, தவுத்தாய்குளம், அரியலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக அரியலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வரும்போது ரோட் ஷோ நடத்தக் கூடாது.

எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. பரப்புரை வழித்தடத்தில் விஜயின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது.

பொதுமக்கள் பரப்புரையை சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களை தாங்களே அமைத்து தர வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் திருச்சிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்சியின் மாநில மாநாடு தொடங்கி திருச்சியில் நடைபெறும் எந்தவொரு அரசியல் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்ற முக்கிய முடிவை முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை எடுத்த இடம் திருச்சி தான். எம்.ஜி.ஆர். இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தியதும், வரலாறு போட்டு மதிய சத்துணவு திட்டத்தை ஆரம்பித்ததும் திருச்சியில் தான். இந்த திருச்சியை தான் மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக மாற்றப்போவதாகவும் அவர் அறிவித்தார். இப்படி தமிழ்நாடு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும், திராவிட கட்சிகளின் பெரும் முடிவுகளும், நிகழ்வுகளும் அரங்கேறிய மாவட்டமாக திருச்சி உள்ளது. இந்த செண்டிமென்டை பின்பற்றியே திருச்சியை மையமாக வைத்து தனது, மாவட்ட வாரியான பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார். இது தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தமிழ்நாடு அரசியலிலும் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

விஜயின் மாவட்ட வாரியான பயணத்திற்காக சிறப்பு பேருந்து ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பயணத்திற்காக நேற்றே அந்த பேருந்து சாலை மார்க்கமாக, சென்னையில் இருந்து திருச்சி சென்றடைந்தது. தொடர்ந்து, விஜய் இன்று விமானம் மூலம் திருச்சியை சென்றடைய உள்ளார். பேருந்தில் மேற்குறிப்பிடப்பட்ட லோகோவில் இருப்பதை போன்ற வசனங்களுடன், நவீன கேமராக்கள், ஒலிபெருக்கிகள், தொண்டர்கள் மேலே ஏறி வருவதை தடுக்கும் வகையிலான, இரும்பு வேலிகளும் பேருந்தின் கூரையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விஜயின் வருகையை ஒட்டி திருச்சியில் தவெக தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.