கைரோ: ”விமானத்தில் இறங்கி வரும்போது பார்த்தேன். அழகா இருக்கீங்க.. அப்படியே புகைப்பிடிக்கும் பழகத்தை விட்டு விடலாமே” என்று பொது இடத்தில் துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘அட்வைஸ்’ கொடுத்தார்.
ஆனால் அதற்கு ஜார்ஜியா மெலோனி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு புகைப்பழக்கத்தை ஏன் விடமுடியாது என்பதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல் போர் புரிந்து வந்தது. இந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீடு செய்து இந்த போரை நிறுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று எகிப்து நாட்டில் வைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம்அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி தலைமையில் கையெழுத்தானது. எகிப்தில் கையெழுத்தானது. காசா அமைதி உச்சி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த உச்சி மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது அருகே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இருந்தார். அப்போது எர்டோகன், ஜார்னியா மெலோனியை பார்த்து, ”நீங்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கி வரும்போது பார்த்தேன். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். இதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்” என்று கூறினா்ர்.
இதனை பக்கத்தில் இருந்த இமானுவேல் மேக்ரான் கேட்டவுடன் சத்தமாக சிரித்தார். அதோடு எர்டோகனிடம், ”இது சாத்தியமாற்றது” என்று கூறி சிரித்தார். இதற்கிடையே தான் ஜார்ஜியா மெலோனியும், ”தெரியும்.. தெரியும்..” என்றார். அதாவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடும்போது பிற தலைவர்கள் தன்னை இணக்கமானவர் என்று நினைக்காமல் போகலாம். இதனால் அதனை கைவிட முடியாது என்று கூறியுள்ளார்.
உண்மையில் ஜார்ஜியா மெலோனிக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அவரது இண்டர்வியூக்கள் அடிப்படையிலான புத்தகம் ஒன்றில் துனிசிய அதிபர் கைஸ் சைட் உள்ளிட்ட சில தலைவர்களுடன் தனது பிணைப்பை அதிகரிக்க புகைப்பழக்கம் உதவியதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில் துருக்கி அதிபர் எர்டோகனை எடுத்து கொண்டால் அவர் தன் நாட்டில் இருந்தே புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க முயன்று வருகிறார். புகைப்பழக்கம் இல்லாத துருக்கியை உருவாக்குவதாக அவர் கூறியுள்ளார். இதற்காக “புகைப்பழக்கம் இல்லாத துருக்கி” என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். புகைப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், புகைப்பழக்கத்தை கைவிட உதவும் நடவடிக்கைகளை எர்டோகன் தீவிரப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தான் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடமும் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று எர்டோகன் கூறியுள்ளார். தற்போது அவர்கள் 2 பேருக்கும் இடையான உரையாடல் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பேசும் பொருளாகி உள்ளது.