உங்களுக்கு 1 மணி நேரம் தான் டைம்… எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கும் அவகாசம் கொடுத்த நீதிபதிகள்…

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வாதம் வைக்க தலா 1 மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

இதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும். அந்த பொதுக்குழுவில் எந்த பதவியும் உருவாக்கப்படவில்லை, நீக்கப்படவில்லை. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எடப்பாடி தரப்பு இந்த வழக்கில் சில முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளது. முதல் கோரிக்கை இந்த வழக்கில் மறுவிசாரணை. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக மறுவிசாரணை நடத்த வேண்டும். இது போக மேலும் சில கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி தனி நீதிபதி கொடுத்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று முக்கியமான சில திருப்பங்கள் நடைபெற்றன,. இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவிக்கிறோம் என்று கூறினர். நேரடியாக மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வழக்கில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால் இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, வழக்கில் வாதங்களை முன்வைக்க நாங்களும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதாவது அவரும் வழக்கில் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அழுத்தமாக கோரிக்கை எதையும் வைக்கவில்லை. கடந்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆவார். ஆனால் ஏனோ இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அந்த கோரிக்கையை வைக்கவில்லை..

இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நாளை மறுநாள் இந்த வழக்கில் விசாரணை நடக்க உள்ளது. இந்த விசாரணையில் 1 மணி நேரம் மட்டுமே இரண்டு பேருக்கும் தலா வழங்கப்பட்டுள்ளது. அதாவது எடப்பாடிக்கு ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அவர்கள் வாதம் வைக்க வேண்டும்.

இரண்டு பேரின் வாதமும் ஒரே நாள் நடக்கும். 1 மணி நேர வாதத்தை இவர்கள் பிரித்து பிரித்து வாதங்களாக வைப்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதனால் அதிகபட்சம் மொத்தமாக 2 மணி நேரத்தில் இரண்டு தரப்பு வாதங்களும் முடியும் . அதே நாளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும். பெரும்பாலும் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.