தமிழக சட்டப்பேரவையில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்து சட்டப்பேரவையை ஒத்திவைத்தார். அடுத்த நாளான 21ஆம் தேதி மறைந்த எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று (22-01-26) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது கறிக்கோழி பண்ணை விவசாயிகள் குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அது ஏற்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுலா ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ மீது சபாநாயகர் அப்பாவுவிடம் நேற்று (22-01-26) பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோவலத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் நிஷா என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தங்கள் நிறுவனத்திடம் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி எஸ்.எஸ்.பாலாஜி தங்கள் நிறுவனத்திற்கு சீல் வைக்க செய்ததாகவும், அதன் பின்னர் அனைத்து ஆவணங்களையும் காட்டி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் நிஷா தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் குற்றச்சாட்டை மறுத்த எஸ்.எஸ். பாலாஜி, பாதுகாப்பு காரணங்களுக்காக ஹெலிகாப்டர் நிறுவனம் தொடர்பாக தலைமை செயலாளருக்கும் கடிதம் எழுதியதாகவும், அரசியல் காரணங்களுக்கு சிலர் அந்த நிறுவனத்தை வைத்து தன் மீது அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.







