இந்தியாவில் தற்போது IPL திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே கிரிக்கெட் போட்டிகள் மீது அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
அப்படிப்பட்ட தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளாக இருந்தாலும் சரி, சர்வதேசப் போட்டிகளாக இருந்தாலும் சரி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சர்வதேச தரத்தில் இரண்டாவது கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்றும், அந்த மைதானம் கோவையில் அமைய உள்ளது என்றும் திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், மைதானம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அமையவுள்ள மைதானத்திற்கு ரூ.500 கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தின் கட்டமைப்பின் அடிப்படையில் அமைய உள்ளது.
பிரமாண்டமாக அமையவுள்ள புதிய மைதானத்தில் மொத்தமாக 30 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் இந்த மைதானம் மொத்தமாக 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்பட்டுள்ளது.
புதிய மைதானம் ஒரு நிமிடத்திற்கு 10000 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் தான் மழை நீரை உறிஞ்சும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்ற நிலையில், கோவையில் அதனையும் மிஞ்சும் வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஒண்டிப்புதூரில் அமையவுள்ள புதிய மைதானத்திற்கான மாதிரி வரிவமைப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. முதல்வர் அனுமதி அளித்தவுடன் மைதாத்திற்கானக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த மைதானம் 2027ம் ஆண்டில் நிறைவு பெற்று திறப்பு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் அமையவுள்ள இந்த மைதானம் திறக்கப்பட்டதும் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேசப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள், ராஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளும் இந்த மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.