இந்தியாவில் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது.
வரும் 2027 ஜனவரி 1 முதல் ‘சிம் பைண்டிங்’ எனும் புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
இந்த விதியின்படி, நீங்கள் எந்தத் தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் கணக்கு வைத்துள்ளீர்களோ, அந்த எண்ணுக்கான சிம் கார்டு நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனுக்குள்ளேயே கட்டாயம் இருக்க வேண்டும். போனில் சிம் கார்டு இல்லாவிட்டாலோ அல்லது அந்த எண் முடக்கப்பட்டிருந்தாலோ வாட்ஸ்அப் செயலி இயங்காது.
தற்போது வரை வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்க ஒருமுறை ஓடிபி மூலம் கணக்கைச் சரிபார்த்துவிட்டால் போதும், அதன்பின் சிம் கார்டைக் கழற்றிவிட்டாலும் அல்லது வேறு போனில் மாற்றினாலும் வைஃபை இணைப்பைக் கொண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த முடிந்தது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சம்பந்தமில்லாத எண்களில் வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்கி, போலி அரசு அதிகாரிகள் போல நடித்தும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்தும் சைபர் குற்றவாளிகள் அதிகளவில் பண மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆன்லைன் சிம் மோசடிகளை முழுமையாகத் தடுப்பதற்காகவே மத்திய தொலைத்தொடர்புத் துறை இந்த கடுமையான சிம் பைண்டிங் விதியை நடைமுறைப்படுத்துகிறது. இந்த புதிய விதியால் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஈ-சிம் பயன்படுத்துபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், ஈ-சிம் கார்டு போனுக்குள் டிஜிட்டல் முறையில் இயங்கினால் வாட்ஸ்அப் வழக்கம்போல வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆப்பிள் நிறுவனமும் தனது ஐஓஎஸ் மென்பொருளில் சிம் கார்டு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மாற்றங்களைச் செய்துள்ளது. கணினிகளில் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்அப் வெப்’ சேவையில் அவ்வப்போது தானாகவே லாக்-அவுட் ஆகும் என்ற விதி தளர்த்தப்பட்டு, கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே லாக்-அவுட் ஆகும் வகையில் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு போன்களை வைத்துக்கொண்டு ஒரு போனின் சிம் எண்களை வைத்து மற்றொரு போனில் வைஃபை மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வரும் ஜனவரி 1, 2027 முதல் வாட்ஸ்அப் இயங்க வேண்டும் என்றால், அந்த வாட்ஸ்அப் எண்ணின் சிம் கார்டு அதே போனில் இருக்க வேண்டும் மற்றும் அந்த சிம் கார்டு ரீசார்ஜ் செய்யப்பட்டு இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை சிம் கழற்றப்பட்டால் வாட்ஸ்அப் தற்காலிகமாகச் செயல்படாது; ஆனால் மீண்டும் அதே சிம்மை போனில் போடும்போது பழைய சாட்கள் எதுவும் அழியாமல் செயலி மீண்டும் இயங்கத் தொடங்கும்.






